
ஆசியாவின் மிகப் பெரிய சுற்றுலாத் தலங்களில் இந்தோனேசியாவின் பாலி தீவும் ஒன்று. அங்கு ஆண்டுதோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
பாலி தீவில் மவுண்ட் அகுங் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 21-ம் தேதி லேசாக சீறத் தொடங்கியது. கடந்த 25-ம் தேதி முதல் எரிமலை சீற்றம் அதிகரித்தது. இதன்காரணமாக 10 கி.மீ. சுற்றளவுக்கு எரிமலை சாம்பல் பரவியுள்ளது.
எரிமலை அவ்வப்போது வெடித்துச் சிதறுவது சுமார் 12 கி.மீ. தொலைவு வரை கேட்கிறது. மலை உச்சியில் சுமார் 11,150 அடி வரை கரும்புகை சூழ்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாலி தீவு விமான நிலையம், அருகில் உள்ள லொம் போங் தீவு விமான நிலையம் ஆகியவை மூடப்பட்டுள்ளன. 450-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள் ளன.
எரிமலை அருகே 22 கிராமங்களில் வசித்த லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பரிதவித்து வருகின்றனர். எரிமலையின் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உயர்மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலி தீவு மக்கள் அனைவருக்கும் முகமூடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1963-ம் ஆண்டில் மார்ச் 17, மே 16 ஆகிய தேதிகளில் இதே மவுண்ட் அகுங் எரிமலை வெடித்தது. அப்போது 1,500 பேர் பலியாகினர். எனவே இந்த முறை இந்தோனேசிய அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலி தீவு எரிமலை சீற்றத்தால் இந்தோனேசியா முழுவதும் பாதிப்பு ஏற்படும். எனவே அந்நாட்டுக்கு ஆஸ்திரேலியர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இந்தோனேசியாவில் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் 130 எரிமலைகள் உள்ளன.
Post a Comment