Ads (728x90)

பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம் போன்ற எதுவும் பகவத் ஸ்வரூபத்துக்குக் கிடையாது. எவனொருவன் பிரம்மத்தோடு ஐக்கியம் ஆகின்றானோ அவனே பிரம்மச்சாரி மானுடப் பிறவிகளுக்கே உரித்தான வர்ணங்கள், ஆஸ்ரமங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் இறைவன். பகவானது வடிவம் என்பது தத்வ ஸ்வரூபம். அதை அப்படியேதான் புரிந்துகொள்ள வேண்டும். 

கிருஷ்ண அஷ்டோத்தரம் 16,000 கோபிகா ஸ்த்ரீகளை மணந்த கிருஷ்ண பகவானை அநாதி பிரம்மசாரி என்றே குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில் பிரம்மச்சாரியாக வணங்கப்படும் கணபதி, வட இந்தியாவில் ஸித்தி, புத்தி என இரு துணைவியரோடு வணங்கப்படுகிறார். கார்த்திகேயனான முருகன் வடநாட்டில் பிரம்மசாரி, ஆனால், இங்கே அவருக்கு வள்ளி மற்றும் தெய்வானை என இரு துணைவியர். அதுபோலவே சாஸ்தாவுக்கு பூர்ணா, புஷ்கலா என்று இரண்டு சக்திகள் கூறப்படுகிறது.

பகவானது சக்தி ஸ்வரூபமே அவரது துணைவியர்களாக உருவகப்படுத்தப்படுகிறது. இறைவனது இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தி ஸ்வரூபங்களே நமக்கு புலனாகும் வண்ணம் பகவானது இரு புறமும் துணைவியர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சக்தி ஸ்வரூபங்கள் வெளிப்படையாக இல்லாத இடங்களில், இவை இறைவனுக்கு உள்ளேயே உறைந்திருப்பதாகக் கருதப்படுகின்றன. மஞ்சள் மாதா கதை குறித்தும் சிலர் கேள்வி எழுப்புவார்கள். கன்னி ஐயப்பன் எந்த வருடம் வரவில்லையோ அப்போது மஞ்சமாதாவை திருமணம் செய்து கொள்வதாக மணிகண்டன் வாக்கு தந்ததாகக் கூறுவர். 

இதுகுறித்த சான்றுகள் எந்த புராணத்திலும் இல்லை. மகிஷியை லீலாவதி (துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோரின் வெளிப்பாடு) அம்சம் என்பார்கள். அது உண்மை எனில், அவள் ஐயப்பனது தாயார் ஸ்தானத்தை அடைகிறாள். அவளுக்கு சாப விமோசனம் கொடுத்து, புது வாழ்வு கொடுத்தவர் ஐயப்பன். எனவே, அவளுக்கு தகப்பன் ஸ்தானம் ஆகிறார். ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் மணிகண்டனால் அவளை திருமணம் செய்து கொள்ளமுடியாது. எனவே, மஞ்சாம்பிகா சாஸ்தாவின் பரிவார தெய்வங்களுள் ஒருத்தியாக மணி மண்டபத்தின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சக்திகளின் ஸ்வரூபமாக அங்கே இருந்து, வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் என்பது பெரியோர்களின் கருத்து.

Post a Comment

Recent News

Recent Posts Widget