
நீதிமன்றத் தடைகள், நிர்வாகச் சிக்கல்களால் தேர்தல் வைக்கமுடியாமல் போகும் சபைகள் தவிர்ந்த எஞ்சிய சபைகளில் தேர்தலைத் திட்டமிட்ட படி ஜனவரியில் நடத்தி முடிப்பது என்று ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகின்றது. இது தொடர்பான ஆணைக்குழுவின் தெளிவான நிலைப்பாடும் அரச உயர் மட்டத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
நீதிமன்றினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படாத 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான அறிவிப்பை நாளை திங்கட்கிழமை வெளியிடுவது என்று தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுத் தீர்மானித்தது. அதன்படி ஜனவரி மாதம் 29ஆம் திகதி திட்டமிட்டவாறு இந்தச் சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.
இந்த ஏற்பாடுகளுக்கு அமைவாக தேர்தல் நடைபெற்றால் வடக்கு மாகாணத்தில் சாவகச்சேரி நகர சபைக்கு மாத்திரமே தேர்தல் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்தது.
உள்ளூராட்சி அமைச்சரினால் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசெம்பர் 4ஆம் திகதி வரை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் ஜனவரி 29ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக நேற்றுக் கூடி ஆராய்ந்தது.
நாட்டில் 336 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. நீதிமன்றத் தடையினால் 203 உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி 29ஆம் திகதி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எஞ்சிய 133 உள்ளூராட்சி மன்றங்களிலும் 40 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலையும் இப்போதைய நிலையில் நடத்த முடியாது. அந்த 40 உள்ளூராட்சி மன்றங்களின் வர்த்தமானி அறிவிப்பிலும் உள்ளூராட்சி அமைச்சர் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எந்தப் பிரச்சினையும் இல்லாத 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே திட்டமிட்டவாறு ஜனவரி 29ஆம் திகதி தேர்தல் நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பு, மற்றும் வேட்புமனுக் கோரலுக்கான அறிவிப்பு என்பன நாளை திங்கட் கிழமை வெளியிடப்படவுள்ளது.
இதற்கு அமைவாக வடக்கில் சாவகச்சேரி நகர சபைக்கு மாத்திரமே தேர்தல் நடத்த முடியும். கிழக்கு மாகாணத்தில், ஏறாவூர் நகரசபை, ஏறாவூர்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, மண்முனை பிரதேச சபை ஆகியவற்றுக்கு மாத்திரம் தேர்தல் நடத்த முடியும்.
இதேவேளை உள்ளூராட்சி அமைச்சு 40 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உரிய திருத்தங்களை மேற்கொண்டு உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்தால், வடக்கில் வலி.வடக்கு பிரதேசசபை, வலி.தெற்குப் பிரதேச சபைக்கு மாத்திரம் தேர்தல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment