கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகச் சிறப்புத் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.வாராந்த அமைச்சரவைக் கூட்டம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் நடைபெற்றது. அதில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள நீதியாயத்துக்கான யோசனையை முன்வைத்தார். அமைச்சரவையில் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பெரும் ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகள் விரைவாக இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
முன்னைய ஆட்சியின் ஊழல் பேர்வழிகளைப் பாதுகாக்கவே இந்த அரசும் முயற்சிக்கிறது என்று ஜேவிபி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதனை அடுத்து தனியான தீப்பாயம் அமைத்து அதற்கூடாக விசாரணைகளைத் துரித்ப்படுத்தும் யோசனை பற்றி ஆராயப்பட்டது.
அது தொடர்பான திட்டத்தையே நீதி அமைச்சர் அமைச்சரவையிடம் முன்மொழிந்து அனுமதியைப் பெற்றுள்ளார்.
தலைமை நீதியரசர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் விருப்பம் தெரிவித்தால் ஏனைய நீதிமன்றங்களிலுள்ள வழக்குகளையும் சிறப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றும் வகையிலான யோசனை அமைச்சரவை பத்திரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment