புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்யாவின் கொலை தொடர்பிலான பிரதான குற்றவாளி சுவிஸ் குமார் முதலில் கைதுசெய்யப்பட்ட போது தப்பிச் சென்றமை தொடர்பில் அவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்த அத்தனை சந்தேக நபர்களையும் கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.இது தொடர்பில் ஏற்கனவே வடமாகாணத்தில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித ஜயசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள நிலையிலேயே இந்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி யாழ்ப்பாணம் சென்ற குற்றப்புலனாய்வு பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி விசேட விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான சிறப்புக் குழு, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாணி அபேசேகரவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.ரே.திசேரவின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது சுவிஸ்குமார் தப்பிச் சென்ற விவகாரம் தொடர்பில் தற்போதும் தேடப்பட்டுவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் அப்பொழுது கடமையாற்றிய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனின் வீட்டையும் விசேட சி.ஐ.டி. குழு சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியது.
எனினும் இதன்போது அவர் அங்கிருக்கவில்லை எனவும், பெரும்பாலும் சட்ட விரோதமாக நாட்டை விட்டு அவர் தப்பிச் சென்று இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினமே சுவிஸ்குமார் தப்பித்த விவகாரத்தில் மாவை சேனாதிராஜா எம்.பி.யிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், விசேடமாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கும் அவருக்கும் இடையிலான தொடர்புகள் வித்தியா படுகொலையின் பின்னர் ஊர்காவற்றுறையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட விரிவுரையாளர் தமிழ் மாறன் உள்ளிட்டோருடன் சேர்ந்து நடத்திய விசேட மக்கள் சந்திப்பு தொடர்பில் இவ்விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைவிட தப்பிச்செல்ல முற்பட்ட சுவிஸ்குமாரை பொதுமக்கள் கட்டி வைத்திருந்த போது அங்கு இடம்பெற்றிருந்த சம்பவங்களை ஒளிப்பதிவு செய்த தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவரின் சாட்சியம் உள்ளிட்ட மேலும் பல சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் விசேட பொலிஸ் குழு பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிறிதொரு குற்றச்சாட்டு தொடர்பில் சிறையிலுள்ள பொலிஸ் அதிகாரியான சிந்தக பண்டார, சுவிஸ்குமார் ஆகியோரிடம் சிறைச்சாலைக்குள் வைத்து விசேட விசாரணைகளை முன்னெடுக்கவும் குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்புக்குழு ஊர்காவற்றுறை நீதிவானின் அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சுவிஸ்குமார் தப்பிச் சென்ற விவகாரத்தில் மேலும் சில முக்கிய நபர்களிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ள தாகவும் விரைவில் அதனோடு தொடர்பு டைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் சுட் டிக்காட்டினார்.
Post a Comment