
குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இங்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.,வை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், குஜராத் காங்., செய்திதொடர்பாளர் ரேகாபென் சவுத்ரி பதவியை ராஜினாமா செய்துள்ளதும், கட்சி அலுவலகத்தை தொண்டர்களே அடித்து நொறுக்கிய சம்பவமும் காங்.,க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
குஜராத் 2ம் கட்ட தேர்தலுக்காக காங்., கட்சி சார்பில் 76 பேர் அடங்கிய 3வது வேட்பாளர் பட்டியலை நேற்று (நவ.,26) வெளியிடப்பட்டது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் (நவ.,27) முடிவடைய உள்ள நிலையில் இன்னும் 20 க்கும் மேற்பட்ட இடங்களுக்கான வேட்பாளர்களை காங்., இதுவரை முடிவு செய்யவில்லை. இதனால் சீட் ஒதுக்குவதில் கட்சிக்குள் சலசலப்பு உருவாகி உள்ளது.
இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கும் சீட் ஒதுக்கியதில் கட்சிக்குள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கட்சி தொண்டர்கள் பலர் நேற்று இரவு, காந்தி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி உள்ளனர். உண்மையில் தேர்தலில் பா.ஜ.,விற்கு கடும் போட்டியை தர காங்., விரும்பினால் அக்கட்சிக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் மிக சொற்ப இடங்களை கைப்பற்றுவது கூட மிக கடினமானதாகி விடும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Post a Comment