
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதும்,
பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் இந்த சந்திப்புக்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய விமானப்படையின் விசேட விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டு நேற்று காலை 7.10 மணியளவில் கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்த அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லை அமைச்சர் சாகல ரத்நாயக வரவேற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் ஆகியோருக்கு இடையிலான சந்துப்பு இடம்பெற்றது. அதன் பின்னர் காலை 8.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்புகளின் போது இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நட்புறவு செயற்பாடுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக அவுஸ்திரேலிய அரச முதலீட்டாளர்கள் மூலமாக இலங்கையில் முன்னெடுக்கும் பொருளாதார நகர்வுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு நாட்டு பிரதமர்கள் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோத ஆட்கடத்தல் நகர்வுகள் இலங்கை கடல் எல்லையில் அதிகரித்துள்ள நிலையில் சட்டவிரோத ஆட்கடத்தலை தடுக்கும் நடவடிக்களை மேலும் பலப்படுத்த இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இலங்கை அரச தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கடற்படை மூலமாக இவ்வாறான இணை நகர்வுகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தைகளின் பின்னர் நேற்று பிற்பகல் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் மீண்டும் அவுஸ்திரேலிய விமானப்படையின் சிறப்பு விமானத்தில் அவுஸ்திரேலியா நோக்கிய பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment