திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி முழுமையாக இயங்கச் செய்யப்பட்டால், ஆசியப் பிராந்தியத்துக்கே எண்ணெய் விநியோகத்தை இலங்கையினால் மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவரான கலாநிதி சரத் அமுனுகம மேலும் தெரிவித்ததாவது:
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பைப் பேணுவதற்குத் தவறியதே, இந்த நெருக்கடிக்குப் பிரதான காரணம். செயற்கைத் தட்டுப்பாடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
மக்களின் நாளாந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அரசு பொறுப்பேற்கிறது. குறைந்தபட்ச கையிருப்பை மேற்கொள்ளத் தவறிய, பெற்றோலியக் கூட்டுத்தாபன நிர்வாகத்தின் செயலை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம், 90 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தும் வசதிகள் உள்ளன. ஆனால் 20 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் கூட கையிருப்பில் இருக்கவில்லை. குறைந்தபட்சக் கையிருப்பைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பேணத்தவறியமைக்கு எந்தக் காரணமும் இல்லை.
எண்ணெய் களஞ்சியப்படுத்தும் வசதிகளை அதிகரிக்க வேண்டும். திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் களஞ்சியங்களை முழுமையாக இயங்கச் செய்தால், ஆசியா முழு வதற்கும் எம்மால் எரிபொருளை விநி யோகிக்க முடியும் – என்றார்.
Post a Comment