காலியில் முஸ்லிம்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், இது அருவருக்கத்தக்க செயல் எனவும் கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
எமது சகோதர இனமான முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தச் சம்பவத்தை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது வேண்டத்தகாத செயல் அருவருக்கத்தக்க செயல்.
நாட்டில் மீண்டுமொரு இன ரீதியான வன்முறைக்குத் தூபமிடும் செயல். முஸ்லிம் மக்கள், தமிழ் மக்களின் சகோதரர்கள் மட்டுமல்ல சிங்கள மக்களின் சகோதரர்கள் என்பதையும், இந்த மூன்று இனத்தவர்களும் இந்த நாட்டின் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதையும் வன்முறையில் ஈடுபட்டவர்களும் அவர்களைத் தூண்டிவிட்டவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
வன்முறையில் ஈடுபட்டவர்களையும், அவர்களைத் தூண்டி விட்டவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவது ஆட்சியில் உள்ள அரசின் முக்கிய கடமையாகும் - என்றார்.
Post a Comment