Ads (728x90)

 பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்றும் 2வது நாளாக இஸ்லாமியவாதிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்களை எரித்தனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தேர்தல் சீர்திருத்த சட்டம் 2017-ல் மதத்தின் பெயரில் பதவிப் பிரமாணம் எடுப்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சட்ட அமைச்சர் ஜகித் ஹமீத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த 3 வாரங்களாக தெஹ்ரீக்-இ-காத்தம், தெஹ்ரீக்-இ-லாபாய்க் மற்றும் சன்னி தெஹ்ரீக் பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படைகள் முயன்றபோது பயங்கர கலவரம் வெடித்தது. இதில், 6 பேர் கொல்லப்பட்டனர். 95 பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் உட்பட 200 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் முற்றுகை போராட்டம் தொடர்ந்தது. போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்தனர். இதனால், அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதித்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சட்ட அமைச்சர் பதவி விலகும் வரையில் தங்கள் போராட்டம் கடைசி வரை நீடிக்கும் என்று தெஹ்ரீ்-இ-லாபாய்க் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் எஜாஸ் அஷ்ரபி தெரிவித்தார். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். போராட்ட செய்திகளை ஒளிபரப்புவதை தடுக்க, செய்தி சேனல்கள் நேற்றும் 2வது நாளாக முடக்கப்பட்டன.

Post a Comment

Recent News

Recent Posts Widget