‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது உண்மை. ரஷ்ய ஆதரவு அமைப்புகளின் எதிர்மறையான கருத்துகள் சுமார் 12.6 கோடி அமெரிக்கர்களை சென்றடைந்தது’ என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 2016 நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு ட்ரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர்.
தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் ஹிலாரியின் சர்ச்சைக்குரிய 6.5 லட்சம் இ-மெயில்கள் இணையத்தில் வெளியாகின. மேலும் ஹிலாரி யின் உடல்நலம் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவின. இவற்றின் பின்னணியில் ரஷ்ய ஆதரவு அமைப்புகள் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. அதிபர் தேர்தலில் ஹிலாரியை தோற்கடிக்க ரஷ்ய அமைப்புகள் சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துகளைப் பரப்பியதாக ஜனநாயக கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இறுதியில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க செனட் சபையின் நீதிக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் முன்பு பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவன அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் கூறியபோது, அதிபர் தேர்தலின்போது ரஷ்யாவின் எதிர்மறையான கருத்துகள் சுமார் 12.6 கோடி அமெரிக்கர்களைச் சென்றடைந்தது என்று தெரிவித்தனர். இது அந்த நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.
கூகுள், ட்விட்டர் நிறுவன அதிகாரிகளும் செனட் நீதிக் குழு முன்பு இதே கருத்தை முன்வைத்துள்ளனர். கூகுளின் யு டியூப் மூலமும் ட்விட்டர் மூலமும் ரஷ்ய ஆதரவு அமைப்புகள் தங்களது கருத்துகளை பரப்பியிருப்பதாக அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்விட்டரில் மட்டும் ரஷ்ய ஆதரவு அமைப்புகள் சுமார் 36,746 கணக்குகளை கையாண்டுள்ளன. இதன்மூலம் சுமார் 14 லட்சம் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களின் அடிப்படையில் செனட் சபை நீதிக் குழு உறுப்பினர்கள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்
Post a Comment