சீனா 1000 கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைத்து பிரம்மபுத்திரா நதியை தன் பகுதிக்கு திருப்ப திட்டமிட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சீனாவின் ஹாங்காங் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சவுத் சீனா மார்னிங் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சவுத் சீனா மார்னிங் வெளியிட்ட செய்தியில், ''உலகிலேயே நீளமான சுரங்கப்பாதை திட்டத்தை சீனா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சாங்போ/பிரம்மபுத்திரா நதியை சீனாவின் ஜின்ஜியாங் பகுதிக்கு திருப்ப சீனா திட்டமிட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்தத் திட்டத்துக்கு சூழலியல் ஆர்வலர்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். பிரம்மபுத்திரா நதி இமய மலையிலிருந்து உருவாவதால் இந்தத் திட்டத்தால் இமயமலை பிரதேசத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபெத்தில் அமைந்துள்ளது பிரம்மபுத்திரா நதி. இது இமயமலையில் உருவாகி திபெத் வழியாக இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்துக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்களுக்குள் நுழையும்.
சீனாவின் இந்தத் திட்டம் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Post a Comment