யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் வெள்ளை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்றும், ஆவா குழுவுக்கு தகவல்களை வழங்குபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், இராமநாதன்வீதி, கலட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகரில் உள்ள புடைவை விற்பனை நிலையத்தில் இந்த இளைஞர் பணியாற்றுகின்றார். வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் இளைஞரை வானில் ஏறுமாறு கூறியுள்ளனர். இளைஞர் மறுத்துள்ளார். பொலிஸார் இளைஞரை வானில் ஏற்றிச் சென்றனர் என்று கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து வாள் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களுக்கு கடத்தலாக தெரிந்திருக்கலாம். ஆனால் கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவின் முக்கிய உளவாளி. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முக்கியமான பல வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு இவரே உளவு வேலை செய்தவர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேடப்பட்ட நபர் என்ற அடிப்படையில் இரகசியமான முறையில் கைதுசெய்தோம் என்று கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
Post a Comment