Ads (728x90)

தலைநகர் வாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன்படைத்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா மீண்டும் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இதன்மூலம் அணுஆயுத நாடாகி விட்டோம் என்று அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை, சர்வ தேச சட்ட திட்டங்கள் எதையும் பின்பற்றாமல் வடகொரியா ஏவுகணை, அணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே அணுகுண்டை விட சக்தி வாய்ந்த நைட்ரஜன் வெடிகுண்டை சோதனை நடத்தியது. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதனை செய்து பார்த்தது.

இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உட்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் ஐ.நா.வும் கடும் பொருளாதார தடைகளை விதித்தது. இதையடுத்து கடந்த 2 மாதமாக வடகொரியா அமைதி காத்து வந்தது. இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா நேற்று காலை சோதனை நடத்தி பார்த்தது.

ஏவுகணை சோதனை முடிந்த சில மணி நேரத்துக்குப் பிறகு வடகொரியா அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், ‘‘அணுகுண்டு ஏந்திச் சென்று தாக்கும் அதிக சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்த ஏவுகணை 4,475 கி.மீ. உயரம் சென்ற பிறகு 950 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று கடல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலக்கை திட்டமிட்டபடி தாக்கி அழித்தது’’ என்று தெரிவித்தது. இந்த ஏவுகணைக்கு ‘வசாங்-15’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

வசாங்-15 ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் இலக்கை தாக்கி அழித்துள்ளது. இதற்கு அந்நாடு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் அதிநவீன வசாங்-15 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதையடுத்து வடகொரியா ஒரு அணுஆயுத சக்தி படைத்த நாடாகி உள்ளது.

அமெரிக்கா வின் மிரட்டல், படையெடுப்பில் இருந்து வடகொரியாவைப் பாதுகாக்கவே இந்த சோதனை நடத்தி பார்க்கப்பட்டது. இதன் மூலம் பொறுப்புள்ள அணுசக்தி நாடாக வடகொரியா நடந்து கொள்ளும்’’ என்று பகிரங்கமாக அறிவித்தார்.

வடகொரியாவின் இந்த சோதனைக்குப் பிறகு தலைநகர் சியோலில் தென்கொரிய அதிபர் மூன்-ஜே, உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் மூன் கூறும்போது, ‘‘வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கொண்டு தாக்கிவிட்டால், அதன்பின் நிலைமை மோசமாகி விடும். அதை தடுத்தே ஆக வேண்டும்’’ என்று கூறினார்.

‘‘தென்கொரியாவின் ஒப்புதல் இல்லாமல் வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது’’ என்று அதிபர் மூன் - ஜே கூறி வருகிறார். ஆனால், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இடையே கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது. அதனால், தென்கொரியாவின் ஒப்புதல் இல்லாமலேயே வடகொரியா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. அப்படி நடந்துவிட்டால் தென் கொரியாவுக்குதான் அதிக ஆபத்து’’ என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது

Post a Comment

Recent News

Recent Posts Widget