Ads (728x90)

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு ராகுல் காந்தி சென்றபோது, இந்துக்கள் அல்லாதோர் பதிவேட்டில் கையெழுத்திட்டதாக பாஜக தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள காங்கிரஸ், இது பாஜகவின் சதி என குற்றஞ்சாட்டியுள்ளது.

குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக 22 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததால் அக்கட்சியின் மீது அதிருப்தி உள்ள நிலையில், அதை பயன்படுத்திக் கொள்ள எதிர்கட்சியான காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்திற்கு இடையே துவாரகா, அம்பாஜி உள்ளிட்ட பிரபல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இந்துக்கள் வாக்குகளை பெறுவதற்காக ராகுல் காந்தி கோயில்களுக்கு செல்வதாக பாஜக புகார் கூறியிருந்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி, சோம்நாத் கோயிலுக்கு நேற்று சென்றார். அவருடன் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் சென்றார். சோம்நாத் கோயில் நடைமுறைப்படி, இந்துக்கள் அல்லாதோர் அதற்காக வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்ல வேண்டும்.

இந்த பதிவேட்டில் ராகுல் காந்தியும் கையெழுத்திட்டு சென்றதாக பாஜக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதன் மூலம் அவர் சார்ந்துள்ள மதம் பற்றி தெரிவிக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள காங்கிரஸ், இது, பாஜகவின் சதி எனக் கூறியுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் தீபேந்திர சிங் ஹூடா கூறுகையில் "அகமது படேலுடன் அங்கு சென்ற ராகுல் காந்தி சென்றதால் இதுபோன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி யார் அவரது குடும்பம், பின்னணி பற்றி பாஜகவுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு மக்களுக்கு அவரை பற்றி நன்றாகவே தெரியும். இது பாஜகவின் சதி. இதுபோன்ற விஷயத்தை வைத்து பாஜக அரசியல் செய்வது தரம் தாழ்ந்த ஒன்று" எனக் கூறினார்.

இதனிடையே, சோம்நாத் கோயிலுக்கு ராகுல் காந்தி வந்ததை சர்ச்சையாக்குவது வேதனையளிப்பதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget