
'பத்மாவதி' திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிட தடை விதிக்கக் கோரிய வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் அவரின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:
''பதற்றமான சூழலில் அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். படத்தின் தணிக்கை சான்று குறித்து தணிக்கைக் குழுவிடம், அரசு பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் கருத்தைத் திணிக்கக்கூடாது'' என்று தெரிவித்துள்ளது.
'பத்மாவதி' படத்துக்கு பல மாநிலங்கள் தடை விதித்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்து கூறியுள்ளது.
பிரச்சினையின் பின்னணி
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தை வெளியிட கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.இதன்காரணமாக 'பத்மாவதி' திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பத்மாவதி திரைப்படத்தை பிரிட்டனில் வெளியிட அந்த நாட்டு தணிக்கை வாரியம் முறைப்படி அனுமதித்துள்ளது.
இந்நிலையில் பத்மாவதி திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிட தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரின் மனுவை இன்று (நவ.28) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பத்மாவதி திரைப்படத்தை திரையிட மத்திய பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் படத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
Post a Comment