
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தது.
கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வேட்புமனுக்களை கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் ஒப்படைத்தார். மன்னார் மாவட்டத்தின் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
கட்சியின் முகவராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த வேட்புமனுக்களை மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரிடம் நேற்று ஒப்படைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 4 சபைகளில் புதுக்குடியிருப்பு தவிர்ந்த ஏனைய மூன்று சபைகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தது. கட்சியின் முகவராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா வேட்புமனுக்களை நேற்றுத் தாக்கல் செய்தார்.
வவுனியா மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை, கூட்டமைப்பின் முகவராக நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் நேற்றுத் தாக்கல் செய்தார்.
முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் எஞ்சியுள்ள ஒவ்வொரு சபைகளுக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தில் எஞ்சியுள்ள 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கூட்டமைப்பு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment