
கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.
பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக புதன்கிழமை அறிவித்தார்.
ட்ரம்ப்பின் இந்த முடிவை எதிர்த்து, துருக்கி, பாலஸ்தீனம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்தது குறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசும்போது, "இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே சமாதானம் ஏற்பட ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரம் என்பதை பாலஸ்தீனம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
3,000 ஆண்டுகளாக ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக இருந்து வருகிறது. வேறு எந்த நாட்டுக்கும் ஜெருசலேம் தலைநகராக இருந்ததில்லை" என்று கூறியுள்ளார்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் ஐ.நா.வும் அமெரிக்க அதிபரின் முடிவை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment