பெர்த் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை மழையும் கைவிட அந்த அணி 2-வது இன்னிங்சில் 218 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா ஆஷஸ் மகுடத்தை இங்கிலாந்திடமிருந்து மீட்டு தொடரில் 3-0 என்று முன்னிலை வகிக்கிறது.இன்று மழை காரணமாக ஆட்டம் 3 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது, பிட்ச் விளையாட முடியாத அளவுக்கு இரட்டை நிலை எய்தியது, சில பந்துகள் தாழ்வாக வர, பல பந்துகள் எழும்ப, கடுமையாக ஸ்விங்கும் ஆனது, டேவிட் மலான் மட்டுமே முதல் இன்னிங்ஸ் சதத்தைத் தொடர்ந்து அபாரமாக நின்று 2-வது இன்னிங்ஸிலும் 54 ரன்கள் எடுத்துத் தாக்குப் பிடித்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 18 ஓவர்கள் வீசி 6 மெய்டன்களுடன் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, கமின்ஸ். லயன் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்சில் 368/4லிருந்து 403 ஆல் அவுட் ஆகி, ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்டியும் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆக்ரோஷ 239 ரன்கள் மற்றும் மிட்செல் மார்ஷின் அராஜக 181 ரன்களுடன் ஆஸ்திரேலியா 662/9 என்று டிக்ளேர் செய்தது.
இன்று அந்து நொந்து போன நிலையில் இங்கிலாந்து முழு சரணடைந்த போதும் ஜேம்ஸ் ஆண்டர்சன், கமின்ஸ் பவுன்சரில் காதோரம் ஹெல்மெட்டில் ஒரு அடி வாங்கியது இங்கிலாந்து அணியின் பரிதாப நிலையை தொகுத்துக்கூறுமாறு அமைந்தது.
3 மணி நேர மழை தாமதத்துக்குப் பிறகு இங்கிலாந்து அணி கடினமான பிட்சில் 70 ஓவர்கள் பக்கம் ஆட வேண்டியிருந்தது, அப்படி ஆடியிருந்தால் ஆஷஸ் மகுடத்தை இந்த டெஸ்ட் முடிந்த நிலையிலும் இங்கிலாந்து பக்கமே இருந்திருக்கும். ஆனால் தற்போது 5-0 ஒயிட்வாஷைத் தடுப்பது பற்றி அந்த அணி யோசிக்க வேண்டியுள்ளது, இது மட்டுமல்ல ஏகப்பட்ட விஷயங்களை இங்கிலாந்து தற்போது பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
முதல் நாள் பெய்த மழை நீர் மைதானத்தில் பிட்ச் கவருக்கு அடியிலும் ஊடுருவியது. இதன் தாக்கம் காரணமாக ஹேசில்வுட் பந்து ஒன்று தாழ்வாக வந்து பேர்ஸ்டோ மட்டையின் கீழ் சென்று ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது. இதே ஓவரில் மொயின் அலி 2-வது ஸ்லிப்புக்கு எட்ஜ் செய்ய ஸ்மித் கேட்ச் எடுத்தார், ஆனால் நடுவர் சந்தேகம் மொயின் அலிக்குச் சாதகமாக அமைந்தது.
மொயின் அலி, டேவிட் மலான் சுமார் 15 ஓவர்கள் ஓட்டினர். நேதன் லயன் வழக்கம் போல் மொயின் அலியை ரவுண்ட் த விக்கெட் கோணங்களில் படுத்தினார், கடைசியில் ஒரு பந்து திரும்பாமல் நேரே செல்ல 11 ரன்களில் மொயின் நேராக வாங்கி வெளியேறினார்.
டேவிட் மலான் சுவராக நின்றார், புல் ஷாட்டில் பலமானவராக தெரிந்தாலும் 54 ரன்களில் லெக் திசையில் வந்த ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்றார், கிளவ்வில் பட்டு பெய்னிடம் கேட்ச் ஆனது, இதற்கு முதல் ஓவரில் மலானை அவர் படுத்தி எடுத்தார், அதன் விளைவாக தடுமாற்றமடைந்த மலான் கடைசியில் ஒன்றுமில்லாத பந்தில் அவுட் ஆக நேரிட்டது. கிரெய்க் ஓவர்டன், ஹேசில்வுட் பந்தை கவாஜாவிடம் கல்லியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்டூவர்ட் பிராடும் ஷார்ட் பிட்ச் பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.
22 ரன்கள் எடுத்த கிறிஸ் வோக்ஸ், கமின்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தை விக்கெட் கீப்பரிடம் கிளவ் செய்து ஆட்டமிழந்தார், ஆஸ்திரேலியர்களின் கட்டிப்பிடி கொண்டாட்டம் தொடங்கியது. இங்கிலாந்து 72 ஓவர்களில் 218 ரன்களுக்குச் சுருண்டது. 41 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி தழுவியது. சுத்தமாக ஆஸ்திரேலியா இங்கிலாந்தை முழு ஆதிக்கம் செலுத்தி மனத்தளவில் பெரிய அச்சத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.
ஆட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த டெஸ்ட் பாக்சிங் டே டெஸ்ட், டிசம்பர் 26-ம் தேதி மெல்பர்னில் நடைபெறுகிறது.
Post a Comment