
மகிந்த ஆட்சிக் காலத்தில் பிரதி அமைச்சராக இருந்த றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே, வடக்கு முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தேவநம்பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என்பதை சரத் வீரசேகர ஏற்றுக் கொள்ள வில்லை. அந்த மன்னன் சிங்கள மொழி தோன்றுவதற்கு முன்னர் வாழ்ந்த மன்னன். ஆகவே அவர் எவ்வாறு ஒரு சிங்களவராக இருக்க முடியும்? சிங்கள மொழியானது கிட்டத்தட்ட கி.பி 6ஆவது அல்லது 7ஆவது நூற்றாண்டின் பின்னர் மட்டுமே தோற்றம் பெற்றது.
சிங்கள மொழி தோன்றுவதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த மன்னனை சிங்களவர் எனக் கூறுவது முட்டாள்தனமானது.
சிங்கள மொழி தோன்றியதன் பின்னர் எழுதப்பட்ட நூல்களில் எமது நிலங்கள் தொடர்பாக அவர்களுக்கு விருப்பமான கருத்துக்கள் எழுதப்பட்டிருக்கலாம்.
மேலும், இந்த நாட்டின் மூலப்பெயர் ‘சிங்கலே’ என்று றியர் அட்மிரல் வீரசேகர குறிப்பிட்டிருந்தார். இது பொய்யானது. ஈழம் என்பதே மூலப் பெயராகும். ஹெல என்பது ஈழம் என்பதன் பாளி மொழிச் சொல்லாகும்.
சிங்கலே என்பது கலவைச் சொல்லாகும். இது தொடர்பாக பாரபட்சமற்ற பன்னாட்டு வரலாற்று ஆய்வாளர்கள், போலி வரலாற்றாய்வாளர்களுடன் விவாதம் செய்து உண்மையைக் கண்டறியவேண்டும்.
இத்தகைய போலி வரலாற்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட போலி வரலாற்றுப் பதிவுகளை அழிப்பதற்கு ஒரு மணித்தியாலம் கூடத் தேவையில்லை.
இத்தகைய கற்பனையான கருத் துக்களை இல்லாதொழிப்பதற்கு முன்னாள் பௌத்த திராவிடன் ஒருவனை உருவாக்க வேண்டியிருக்கும் – என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment