
அம்மாவின் வாரிசாக ஆர்.கே.நகர் மக்கள் தன்னைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் கூறினார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.24) காலை சரியாக 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.
முதல் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி சுயேட்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 5990 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணத்தையே ஆர்.கே.நகர் மக்கள் பிரதிபலித்திருக்கின்றனர். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் விரும்புகின்றனர். அதன் எதிரொலியே ஆர்.கே.நகர் மக்களின் முடிவு.
ஆர்.கே.நகரில் இந்த மாபெரும் வெற்றியைத் தந்த ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிலர் கலாட்டாவில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவர்கள் தோல்வி பயத்தில் அவ்வாறு செய்திருக்கின்றனர்" என்றார்.
மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்..
தொடர்ந்து பேசிய அவர், "சின்னம், கட்சியின் பெயர் யாரிடம் இருக்கிறது என்பது தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில்லை. மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே முக்கியம். அதுவே, தேர்தல் வெற்றியை நிர்ணயித்துள்ளது. நான் சுயேட்சை வேட்பாளர் இல்லை; நாங்கள்தான் உண்மையான அதிமுக.
எம்ஜிஆரின் நினைவுநாளான இன்று அம்மாவின் தொகுதியில் வெற்றியைத் தந்திருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
’3 மாதங்களில் ஆட்சி கலையும்'
தமிழகத்தில் அதிமுக அரசு இன்னும் மூன்று மாதங்களில் கவிழ்ந்துவிடும் என டிடிவி தினகரன் கூறினார். தனக்கு மாபெரும் வெற்றியைத் தந்திருக்கும் தமிழக மக்களுக்கு மீனாட்சி கோயிலுள்ள மதுரையில் இருந்து நன்றி சொல்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment