
சர்ச்சைக்குரிய பிணைமுறி விசாரணை அறிக்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ள நிலையில்,அரச தலைவர்
அடுத்து எடுக்கும் நடவடிக்கையில்தான் கூட்டு அரசின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று அரச தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
2015ஆம் ஆண்டு ஓகஸ்ட மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் பெரும்பான்மைப் பலத்தை பெற முடியாது போனது. கூட்டு அரசு அமைக்கப்பட்டது. கூட்டு அரசை அமைப்பதற்காகச் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை இன்றுடன் காலாவதியாகின்றது.
இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டு அரசை மீண்டும் தொடர்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பாக வெளிப்படையான பேச்சு எதுவும் நடக்கவில்லை.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னரே கூட்டு அரசு தொடர்பான உடன்டிக்கை விடயங்கள் ஆராயப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறியிருந்தார்.
தேர்தலில் பின்னர் இது குறித்து கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ள போதும், பிணைமுறி விவகாரத்தில் அடுத்தகட்டமாக அரச தலைவர் எடுக்கவுள்ள நடவடிக்கைகளே கூட்டு அரசின் இருப்பைத் தீர்மானிக்கும் காரணிகளாகத் தற்போது மாறியுள்ளன.
அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல், ஜெனிவாத் தொடர், மாகாண சபைத் தேர்தல், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களால் அடுத்த ஆண்டு அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆண்டாக அமையும் என்று எதிர்வுகூறபடுகின்றது.
Post a Comment