Ads (728x90)

இங்கிலாந்து பந்து வீச்சு சாதனையாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தலையில் மதுவை ஊற்றிய சக வீரர் பென் டக்கெட், 2 நாள் பயிற்சி ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையடுத்து இங்கிலாந்தின் இந்தப் பிரச்சினை சிரிப்பதற்குரியதல்ல என்று கூறியுள்ளார் ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன்.

கடந்த செப்டம்பரில் பிரிஸ்டலில் மதுபான விடுதி அருகே பென் ஸ்டோக்ஸ் குடித்துவிட்டு இருவர் மீது பலப்பிரயோகம் செய்தது பிரச்சினையாகி இன்னமும் முடியாத நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது டக்கெட் மது ஊற்றி விளையாடும் சம்பவம் நடந்துள்ளது.

இன்னொரு சம்பவத்தில் பெர்த்தில் ஜானி பேர்ஸ்டோ, ஆஸ்திரேலிய தொடக்க வீரரை தலையால் முட்டி அதன் பிறகு இருவரும் சேர்ந்து குடியாய்க் குடித்த சம்பவமாகும். இது பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் போது சச்சரவுகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எதிரணியினரின் இம்மாதிரி பலவீனமான தருணங்களில் மகிழ்ச்சியடைபவன் நான் இல்லை என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் தெரிவித்துள்ளார்.

“நான் இவற்றையெல்லாம் கடந்து வந்துள்ளேன். எனவே இதைப் பரிகாசம் செய்வது சரியல்ல. நம் கிரிக்கெட் வாழ்க்கை முழுதும் இத்தகைய சூழ்நிலைகளைக் நாமே சந்தித்திருக்கிறோம். எனவே இது வேடிக்கைக்குரியதல்ல” என்றார்.

பொதுவாக எதிரணியினரின் இத்தகைய பலவீனங்களை ஆஸ்திரேலியர்கள் வேட்டை விலங்குகள் போல் மைதானத்தில் பயன்படுத்தி அந்த வீரரை சின்னாபின்னமாக்குவதுதான் வழக்கம்.

ஆனால் டேரன் லீ மேன், “எங்களைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியினரின் புறச்செயல்களைப் பற்றி கவலையில்லை. இங்கிலாந்து நல்ல அணி, அவர்களிடம் சில அபாயகரமான வீரர்கள் உள்ளனர். பெர்த் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் ஆஷஸ் தொடரை மீண்டும் கைப்பற்றுவதிலேயே கவனமாக இருப்பார்கள்” என்றார்.

இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் கூறும்போது, “களத்திற்கு வெளியே நடக்கும் விவகாரங்களைத் தீர்ப்பதே பெரும் சள்ளையாகப் போய் விட்டது.

அணிக்குப் பயிற்சி அளிப்பதா அல்லது வீரர்களின் செய்கைகளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருப்பதா?” என்று வெறுப்படைந்துள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget