சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் செயற்பாடுகள் முழுமையாகச் சிதைந்துவிட்டதாக அந்தக் கட்சியின் செயலரும் அமைச்சருமான துமிந்த திசநாயக்க தெரிவித்தார்.அநுராதபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இரண்டு அணியினரையும் ஒன்றாக இணைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்கள் எழுந்தன. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். எமக்கிடையில்எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை, வீணாக முரண்படவேண்டிய அவசியமில்லை என்று கருதினோம்.
அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்பதில் உறுதியாகச் செயற்பட ஆரம்பித்தோம். சுதந்திரக் கட்சியினர் ஒன்றுபடவேண்டும் என்பதுதான் எமது கருத்து. நான் இன்று ஒரு கருத்தையும் நாளை இன்னொரு கருத்தையும் கூறவில்லை. நாம் ஒன்றுபடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இந்த ஒன்றுபடும் செயற்பாட்டிற்காக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பல முயற்சிகளை எடுத்தார்.
அவருடைய முயற்சியில் அதியுச்சமான இறுதி முயற்சியொன்றையும் முன்னெடுத்திருந்தார். அதில் யாரும் தலையீடுகளையோ தடுப்புக்களையோ செய்யவில்லை. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
அவ்வாறு தோல்வியடைய காரணம் யார்? சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை வேறொரு கட்சிக்கு வருமாறு அழைப்பதுதான் புத்திசாலித்தமான விடயமா? அதுவா கட்சி மீது கொண்டிருக்கும் பற்று? அதுவா கட்சிக்கு அவர்கள் வழங்கும் மரியாதை? இவ்வாறான நிலமையால்தான் ஒன்றுபடும் செயற்பாடு முற்றாகச் சிதைந்து போயுள்ளது என்றார்.
Post a Comment