
மனித உரிமைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. அதில் வடக்கு– கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மூவின இளைஞர்களும் கலந்துகொண்டனர்.
இளைஞர்களால் கேட்கப்பட்ட கேள்வி களுக்கான பதில்களையும் அது தொடர்பான விளக்கங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.
“தற்போது உருவாக்கப்படவுள்ள அரசமைப்பில் கூறப்படுகின்ற ஒரு விடயம் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு. இது அவசியமா என் பது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?”- என்று கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன் தெரிவித்ததாவது அரசமைப்பின் 13ஆவது திருத்தம் வந்தபோது ஒரு தற்காலிக இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அது 18 வருடங்கள் நீடித்தது. அதற்கு முன்னரும் 1957ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் இணைப்பு சாத்தியமாவதற்கான ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது நீண்டகாலமாக இருந்து வருகின்ற ஒரு நிலைப்பாடு. அதனாலேயே அது தொடர்பில் இப்போது பேசப்படுகின்றது. புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் இந்த இணைப்புக்கு மூன்று வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு மாகாணங்கள் ஒன்று சேர்வதாக இருந்தால் அந்தந்த மாகாணங்களில் வாழுகின்றவர்கள் அதற்கு இணங்கினால் இணையலாம் என்கின்ற ஒரு வழி இருக்கின்றது. அதைச் செய்தால் எமது நாட்டில் மாகாணங்களினுடைய எண்ணிக்கைக் குறையலாம். அது மக்களுடைய விருப்பப்படி நடக்கலாம். அரசமைப்பில் அதற்கான ஏற்பாட்டிலே மக்கள் விரும்பினால் ஒன்றிணையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது–என்று நாடாளுமன்ற உறுப்பினர் பதிலளித்தார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர் தெரிவித்ததாவது
சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றுகின்றபோது எங்களுக்கு சமஸ்டி வேண்டும் என்று சொல்லி அவர்களை வெல்ல முடியாது. அதற்கான காரணங்களை சரியான முறையிலே சொல்லவேண்டும்.
வாக்காளர்களைக் கையில் வைத்திருக்கவேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கமாக இருந்தால் சந்தேகம் எழாத வகையில் என்னாலும் செயற்படமுடியும். வீர வசனம் பேசுகின்ற ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்று நானும் இருக்கலாம்.
Post a Comment