
தேர்தல் குறித்த காரியாலயங்கள், பதாகைகள், மற்றும் சுவரொட்டிகள் என்பன இம்மாதம் 31 ஆம் திகதியுடன் அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
தேர்தல் நகர்வுகள் குறித்து மிகவும் நெருக்கடியான மற்றும் பரபரப்பான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தமக்கான வாக்கு கோரி வீடுகளுக்கு செல்லும் குழுக்கள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இலங்கையின் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 12 பேருக்கு மேற்பட்ட குழுவொன்று பயணித்தால் அது பேரணியாகவே கருதப்படும். இதன்படி 12 பேரை விட அதிகாமானவர்கள் சென்றால் அது தேர்தலுக்கான பேரணியாக கருதப்படும். ஆகவே ஒரு கட்சியின் சார்பிலோ அல்லது சுயேச்சைக்குழுவாகவோ 10 பேருக்கு மேல் வாக்கு கோரி வீடுகளுக்கு செல்ல முடியாது.
இது ஆரம்பத்தில் சகல கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. அதையும் மீறி அதிகளவிலான நபர்கள் சென்றால் சம்பந்தப்பட்ட குழு சட்டவிரோத குழுவாக கருதப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படும்.
மேலும் வீடுகளுக்கு சென்று வேட்பாளர்கள் வாக்குறுதிகளை வழங்கவும் அனுமதி இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதும் ஒருவகையில் இலஞ்சமேயாகும். இதன்படி வீடுகளுக்கு செல்லும் வேட்பாளர்கள் தமது கட்சியினதோ அல்லது குழுவினதோ கொள்கை பிரகடனத்தை மாத்திரமே மக்களுக்கு வழங்க முடியும். அதனை மீறி தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினால் அது குறித்தும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சுவரொட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விசேட கூட்டங்கள் , தேசிய மாநாடு போன்ற விடயங்களின் போது சுவரொட்டிகளை ஒட்ட முடியும். இதன்போது கட்சியின் பெயர் கூட்டம் நடக்கும் இடம் , நேரம் , நாள் போன்ற விடயங்களை தவிர வேறு எந்த விடயத்தையோ சின்னங்களையோ பயன்படுத்த முடியாது. அத்துடன் தலைவர் , முன்னாள் தலைவர் என யாருடைய புகைப்படங்களும் பயன்படுத்தப்படக் கூடாது. எனினும் இவ்வாறான சில சம்பவங்கள் பதியப்பட்டு அது குறித்த தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன.
வேட்பாளர்களுக்கு தேர்தல் அலுவலகங்களில் பதாகை மற்றும் சுவரொட்டிகளை ஒட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை அவர்களின் உரிமை கிடையாது. தேர்தல் சட்டத்தின்படி அவ்வாறு செய்ய முடியாது. இருப்பினும் கட்சிகளின் கோரிக்கைகளுக்கமைய வேட்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக அலுவலகங்களில் காணப்படும் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஜனவரி 31ஆம் திகதியுடன் அகற்றிவிட வேண்டும்.
அதேபோல் கட்சிக்கென அனுமதிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை 7ஆம் திகதியுடன் அகற்றியாக வேண்டும். மேலும் கட்சியின் வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்போது வரையில் ஒரு கட்சி மாத்திரமே தமது சொத்து விபரங்களை ஒப்படைத்துள்ளது. ஏனைய கட்சிகளும் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் குறித்த கட்சிகள் மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வேட்பாளர்களுக்கு 22ஆம் திகதிக்கு பின்னர் அலுவலகங்களை நடத்திச் செல்ல அனுமதிக்க மாட்டோம். அதனை மீறி இருக்கும் அலுவலகங்களை பொலிஸாரை கொண்டு அகற்றுவோம்.
மேலும் வடக்கு , கிழக்கு , தெற்கு என சகல பிரதேசங்களிலும் சமய வழிபாட்டு இடங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. அது தொடர்பாக முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கிழக்கில் சமய தளங்களில் அரசியல் பேச்சுக்கள் நடத்தப்படுவதுடன் சிலர் தமது தேர்தல் கொள்கை பிரகடனங்களைக் கூட அங்கிருந்து தயாரித்துள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வழிப்பாட்டு இடங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இதனை மீறி நடந்துக்கொண்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கும் வழிப்பாட்டு இடங்களுக்கு பொறுப்பானவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
சமயம் என்பது வேறு அரசியல் என்பது வேறு, இரண்டையும் தொடர்புபடுத்த முடியாது. அதேபோல் சமயத்துடன் கூடிய வகையில் அரசியலை திணித்து மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடாக இவை அடையாளபடுத்தப்படும். எனவே சகல கட்சிகளும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் நடக்கும் பிரசாரங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களினூடாக பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வோம். அதற்கு தடைவிதிக்க வேண்டுமென்றால் விசேட சட்டங்களை கொண்டு வர வேண்டும். இதனால் அந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். எனினும் இவை சற்று சிரமமான காரியமாகும். எவ்வாறு இருப்பினும் துரிதமான நடவடிக்கைகள் அவசியமாகும்.
கேள்வி:- தேர்தல் கண்காணிப்பு நகர்வுகளில் சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புகள் உள்ளனவா?
பதில்:- தேர்தலின் போது சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்புகள் எதற்கும் இடமில்லை, இம்முறை தேர்தலின் போது உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகள் மட்டுமே கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெபரல், கபே, உள்ளிட்ட முக்கியமான சில சிவில் அமைப்புகள் மூலமாகவே கண்காணிக்கப்படுகின்றது.
கேள்வி:- தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் தொகுதிகளின் சிலவற்றில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் ஒரு நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமாக அமையுமா?
பதில்:- சாத்தியம் உள்ளதாக நாங்கள் கருதுகின்றோம், நீதிமன்ற தீர்ப்புகள் எமக்கு சாதகமாக அமையும் என நம்புகின்றேன். அவ்வாறு இல்லாது குழப்பங்கள் ஏற்படுகின்றன என நீதிமன்றம் கூறும் பட்சத்தில் அவை தவிர்ந்து ஏனைய பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும். எவ்வாறு இருப்பினும் தேர்தல் நடத்தப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை, ஒரே நேரத்தில் சகல மன்றங்களுக்குமான தேர்தலாக அமையும் என நாம் நம்பும்கின்றோம்.
Post a Comment