Ads (728x90)

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், "இசை உலகின் தலை சிறந்த இசையமைப்பாளரான இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்ற இவருக்கு, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொல்லியல் துறையில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமச்சந்திர நாகசாமிக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நானம்மாள் என்பவர் தனது சிறுவயதிலிருந்தே யோகா கற்றுக் கொண்டவர். இவர் 600-க்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். இவருக்கு பத்மஸ்ரீ விருதும்; புகழ்பெற்ற கிராமிய இசைக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதும்; பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கும் வழியை திறம்பட செயல்படுத்திய மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு அவருடைய பணியை பாராட்டும் வகையில் பத்மஸ்ரீ விருதும்; சென்னையில் பாம்பு பண்ணை மற்றும் முதலைப் பண்ணையை நிறுவிய இந்தியாவின் தலைசிறந்த ஊர்வனவியல் ஆய்வாளர் ரோமுலசு விட்டேக்கருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்ததற்கு எனது வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்ம விபூஷன் விருதினை பெற்ற இளையராஜா, பத்ம பூஷன் விருது பெற்ற ராமச்சந்திரன் நாகசாமி, பத்மஸ்ரீ விருதினை பெற்ற நானம்மாள், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், ராஜகோபாலன் வாசுதேவன் மற்றும்ரோமுலசு விட்டேக்கர் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளையும், பாரட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, தாங்கள் மேன்மேலும் இதுபோன்ற பல விருதுகளை பெற எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்"

Post a Comment

Recent News

Recent Posts Widget