
இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மாளிகையில் அனைத்து பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்து உரையாற்றினார்.
இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட முடியுமா என்பதை தீர்மானிக்காவிட்டாலும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன். எதிர்வரும் ஆட்சிக்காலங்களில் நான் பதவியை எதிர்பார்க்க மாட்டேன். ஜனாதிபதி பதவி இருக்குமோ. இல்லையோ நான் பதவியை எதிர்பார்க்க மாட்டேன்.
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆகிய இரண்டும் ஒன்றாக வெளிவருமென நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் இலங்கை மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துமாறு கோரியவர்கள் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்ததும் விவாதம் நடத்துமாறு கோரியவர்கள் அனைவரும் அமைதியாகவுள்ளனர்.
ரவி கருணாநாயக்க இலங்கை மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பொய்யானதெனவும் அது தொடர்பில் நான் ஆற்றிய உரை தவறானதெனவும் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணிகள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவினரை வைத்துத் தான் அறிக்கை தொடர்பான உரை தயாரிக்கப்பட்டது.
பிணைமுறி தொடர்பான விடயங்கள் எனக்குப் பெரும் சவாலாக இருந்தாலும் விரைவில் இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பங்கங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவது பொய்யானது. அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.
எனது ஆட்சிக்காலத்தின் கடந்த 3 வருடங்களில் மனித உரிமைக்கு எதிரான எவ்வாறான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. ஆனால் இப்போது ஐ.நா. சென்று சிலர் எனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமைக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றதாக முறையிடுகின்றனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமைக்கு எதிரான செயற்பாடுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தேவை. அதை நாம் சர்வதேசத்திடம் கேட்டிருந்தோம். சர்வதேசமும் எம்மில் நம்பிக்கை வைத்து மேலதிகமாக இரண்டு வருடங்கள் தந்துள்ளது.
மனித உரிமை தொடர்பான நடவடிக்கைளை அவசரமாக செய்யமுடியாது. அவ்வாறு நாம் செய்யமுற்படும் போது இனங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முதலில் நாம் நல்லிணக்கத்தை உருவாக்கிய பின்னர் தான் ஏனைய பயணங்களைத் தொடர முடியும் காலங்கடந்தாலும் இதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
கடந்த 10 வருடங்களில் வெளிநாட்டுக்கடன் தொகை 10 திரிலியனாக அதிகரித்துள்ளது. இவ்வாறு நிதி பெறப்பட்டமை தொடர்பாக எவ்வித கணக்கறிக்கைகளையும் காணவில்லை. ஆனால் ஒரு திரிலியன் நிதி பெறப்பட்டமைக்கான கணக்கறிக்கை மாத்திரமே உள்ளது. அரச வருமானங்கள் வீணாக இழக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
தேர்தல்காலங்களில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தேர்தல் நிறைவடைந்த பின்னர் மத்தியகுழு கூடி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் சட்டமா அதிபரிடம் கேட்டுள்ளளேன். ஒருவருக்கு மாத்திரமல்ல குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது அரசாங்க கட்சிகளுக்கிடையிலுள்ள பிணக்குகளினால் புதிய அரசியல் யாப்பில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. அரசியல் யாப்பென்பது பாராளுமன்றத்துடன் தொடர்புடைய விடயம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Post a Comment