Ads (728x90)

புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், வெளியூர் செல்வோர் என மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்ல திட்டமிட்டிருக்கும் மக்கள் அனைவரும் இந்த திடீர் வேலைநிறுத்த அறிவிப்பால் கலக்கத்தில் உள்ளனர்.

மக்களின் அவசரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகளும், கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களும் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

முதல்வர் ஆலோசனை:

பிரச்சினை வலுத்துவரும் நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை நிலவரம்:

தலைநகர் சென்னையில், நேற்று மாலையில் கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர்.

இன்று காலையும் நிலவரம் சீரடையவில்லை. ஆங்காங்கே ஒரு சில பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

புறநகர் மின்சார ரயில்களில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. 25% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்குகின்றனர். இதற்கிடையில், இன்று காலை தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த போக்குவரத்து அமைச்சர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர், "ஊதிய உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக இதுவரை 22 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.57 காரணி அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க அரசு ஒப்புக் கொண்டது. இந்த ஊதிய உயர்வால் அரசுக்கு 1000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, போக்குவரத்து ஊழியர்கள் முன்னறிவிப்பு இன்றி வேலைநிறுதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 10 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அரசியலுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்கம் உட்பட 36 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பணிக்கு வந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும்.

வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

விழுப்புரத்தில் பாதிப்பு:

விழுப்புரத்தில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களும் பணிக்கு வராததால் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இயங்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் பணிமனையில் நிறுத்தப்பட்டன.

தற்காலிக ஊழியர்களை கொண்டு பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. இதனால் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் விழுப்புரம் பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடந்தன. இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

மேலும் தனியார் பேருந்துகள் சென்னை திருச்சிக்கு இயக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பேருந்துகளில் நின்றுகொண்டே பயணம் மேற்கொண்டனர்.

மேலும் விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

கோவையிலும் முடங்கியது:

கோவையைப் பொருத்துவரை சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம், காந்திபுரம் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வெறும் 10% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வெளியூர் பேருந்துகளும் இதே நிலையில்தான் இயங்குகின்றன. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பியுள்ளனர்.


மக்கள் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கால் டாக்ஸி ஓட்டுநர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் குறைந்த அளவு தொலைவுக்குக்கூட 3, 4 மடங்கு கட்டணம் கேட்பதாக மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

திருச்சியில் டெப்போவுக்கு திரும்பும் பேருந்துகள்..

திருச்சிராப்பள்ளியைப் பொருத்தவரை பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே போக்குவரத்து பணிமனைகளுக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன.

வெகு சில பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளையும் சில தொழிற்சங்கத்தினர் தடுத்து நிறுத்தி அவற்றை மீண்டும் பணிமனைக்கு கொண்டு வருகின்றனர்.

இதனால், பயணிகள் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டு செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget