Ads (728x90)

 பழங்குடியின இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அருகே உள்ள அட்டப்பாடி வனப்பகுதியைச் சேர்ந்தவர் மது (27). பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவரான இவருக்கு, மனநிலை சற்று பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர், கடந்த புதன்கிழமை, வனப்பகுதி அருகே உள்ள அகாலி என்ற ஊருக்கு அவர் சென்றிருந்தார்.

அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர், மதுவை திருடன் எனக் கூறி சரமாரியாக தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்த அவரை பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் ஜீப்பில் ஏறிய சிறிது நேரத்திலேயே, அவருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மதுவை மர்ம கும்பல் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால்கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் 9 பேரை தேடி வருகின்றனர். கைதானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள ஐஜி அஜித்குமார் தெரிவித்தார். இதனிடையே, இச்சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கேரள அரசிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget