
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராஜு சாமி (54). விவசாயியான இவர் தனது நிலத்தில் ராஜம்மா கோயிலை கட்டி, தினமும் பூஜை செய்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொள்வோருக்கு அடைக்கலம் கொடுத்து, திருமணமும் செய்து வைக்கிறார். இதனால் அப்பகுதி இளைஞர்களிடையே ராஜு சாமிக்கு ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.
இதுகுறித்து ராஜு சாமி கூறும்போது, “நான் எனது மூத்த சகோதரியின் மகளான ராஜம்மாவை காதலித்தேன். எங்களது திருமணத்துக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தடைகளை மீறி ராஜம்மாவை கரம் பிடித்தேன். பின்னர் இருவீட்டாரும் எங்களை ஏற்றுக் கொண்டனர்.
ராஜம்மா மிகவும் தெய்வ பக்தி நிறைந்தவர். பின்னால் வருவதை முன்கூட்டியே அறிந்து குறிசொல்லும் சக்தி வாய்ந்தவர். அவருக்கு எங்களது நிலத்திலேயே கோயில் கட்ட முடிவு செய்தேன். அதன்படி, கடந்த 2003-ல் கோயில் கட்ட தொடங்கினேன். கட்டி முடிப்பதற்குள், எதிர்பாராதவிதமாக ராஜம்மா காலமானார். மிகவும் சிரமப்பட்டு 2006-ல் கோயிலை கட்டி முடித்தேன்.
எங்களுடைய காதல் புனிதமானது. அதைப் போற்றும் வகையில் இந்த கோயிலுக்கு ராஜம்மாவின் பெயரை சூட்டினேன். பின்னர் ராஜம்மாவின் சிலையை வடித்து சிவன், சனீஸ்வரன் ஆகிய சிலைகளுடன் வைத்து வழிபட தொடங்கினேன். முதலில் இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு எனது காதலை புரிந்துகொண்ட அவர்கள், இப்போது நாள்தோறும் வந்து பூஜை செய்கிறார்கள். கடந்த 12 ஆண்டுகளாக மனைவியை கடவுளாக நினைத்து, தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன்.
இதை ‘காதல் கோயில்’ என அழைக்கின்றனர். எங்களது கதையை கேள்விப்பட்டு நிறைய காதலர்கள் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். சாதி, மத பேதங்களை கடந்து காதலிக்கும் நிறைய பேருக்கு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி நானே இங்கு திருமணம் செய்து வைத்திருக்கிறேன். ஏனென்றால் நமது சமூகத்தில் நடக்கும் அத்தனை சண்டைகளையும் காதலால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும்” என்றார்.
Post a Comment