புரோ கபடி தொடருக்கான வீரர்கள் தேர்வு முகாம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.விவோ புரோ கபடி தொடரின் வெற்றியானது, இந்தியாவில் கபடி வீரர்களுக்கு புது உத்வேகத்தை அளித்து இத்துறைக்கான எதிர்காலத்தை பிரகாசமாக்கியுள்ளது.
இதன் எதிரொலியாக விவோ புரோ கபடி போட்டிகளை நடத்தும் மாஷல் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஏகேஎஃப்ஐ இணைந்து அனைத்து இந்திய கபடி சங்கத்தின் ஆதரவுடன் ‘எதிர்கால கபடி ஹீரோஸ்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர். திறமையாளர்களை கண்டெடுத்து அவர்களது திறன்களை வளர்த்து எதிர்கால கபடி சாம்பியன்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதன் முதல் கட்டமாக திறமையான வீரர்களை கண்டெடுக்கும் திட்டத்தை போட்டி அமைப்பாளர்கள் மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக சென்னை, கோவை, நாக்பூர், திரிச்சூர், சண்டிகர், பெங்களூரு, டெல்லி, லக்னோ, விசாகப்பட்டினம், பாட்னா, ஹைதராபாத், கொல்கத்தா, இந்தூர், இம்பால், ஜெய்ப்பூர், புவனேஷ்வர், அகமதாபாத் ஆகிய 17 நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் காட்டிய ஆர்வம் மற்றும் திறமைகளின் அடிப்படையில் இந்த நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் திறன் தேர்வுகள் 3 நாட்கள் நடைபெறுகின்றன.
இந்த வகையில் சென்னையில் வீரர்கள் தேர்வு முகாம் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு கபடி சங்க பொதுச் செயலாளர் சபியுல்லா கூறும்போது, “புரோ கபடி தொடருக்கான வீரர்கள் தேர்வு முகாம் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஜெஜெ விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வு முகாமில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். தேர்வு முகாமில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 18 முதல் 22 ஆகும். இதேபோல் கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது” என்றார்.
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்வு முகாம்களில் 4600-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதில் கடுமையான 3 நிலை தேர்வு முறைகளுக்குப் பின் 133 வீரர்கள் ஏலத்துக்கு தேர்வானார்கள். இவர்களில் 55 பேர் பல்வேறு அணிகளுக்காக தேர்வாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment