
இவ்வாறு முன்னாள் அரச தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கண்டி தலதா மாளிகையில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவித்ததாவது,
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தன் அண்மையில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். எமது தரப்பினர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் அரசு பெற்ற மொத்த சத வீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது என்று கூறினார்.
அப்படியென்றால் அவர்களும் அரசின் ஒரு தரப்பினர் என்பதுதான் பொருளாகும். அரசின் ஒரு தரப்பினராக இருக்கும் ஒரு கட்சியினர் எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியும். அதற்குப் பொருத்தமானவரா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
எதிர்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிர்கட்சிக்கு வழங்குவது நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானது என்று கூட்டமைப்பினர் குறிப்பிடுவது, வேடிக்கையாகவே காணப்படுகின்றது. கூட்டு அரசின் பங்காளியாக மாத்திரம் செயற்படும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தன், தனது பதவியின் கடமைகளை கடந்த மூன்று வருடகாலமாக மேற்கொள்ளாமல் ஒருதலைபட்சமாகவே செயற்படுகின்றார்.
எதிர்கட்சி தலைவர் என்ற பதவியானது அரசுக்கு எதிராகவே செயற்படவேண்டும். அப்போதுதான் ஆளும் அரசு நிர்வாகத்தை முறையாக கொண்டு செல்ல முற்படும். ஆனால் இலங்கையில் அவை சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி பதவி ஒன்று உள்ளதா? என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் கேள்வியாகவே உள்ளது. உறுதியற்ற அரசால் நாட்டுக்கு எந்தவித பயனும் இல்லை. ஆகவே நாட்டின் நலன் கருதி காலதாமதமின்றி நாடாளுமன்றத்தை கலைத்து புதிய ஆட்சி அதிகாரத்தை உருவாக்க வேண்டும்.
Post a Comment