Ads (728x90)

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 488 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 152 ரன்கள் விளாசினார். இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முவில் 38 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்தது. ரென்ஷா 8, பர்ன்ஸ் 4, கவாஜா 53, பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 0, ஷான் மார்ஷ் 16, மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் டிம் பெய்ன் 5, பாட் கம்மின்ஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. வலது கை விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் டிம் பெய்ன் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். அவருக்கு உறுதுணையாக சிறப்பாக பேட் செய்த கம்மின்ஸ் 92 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

 7-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 99 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நாதன் லயன் 8, சாட் சேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் வெளியேறினர். கடைசி வீரராக டிம் பெய்ன் 96 பந்துளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.

முடிவில் ஆஸ்திரேலியா 70 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பிலாண்டர், ரபாடா, கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 267 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியாவுக்கு பாலோ - ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்ஸில் தொடர்ந்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 56 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்ஸிஸ் 30, டீன் எல்கர் 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 401 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா இன்று 4-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது

Post a Comment

Recent News

Recent Posts Widget