Ads (728x90)

தாய்லாந்தின் ராட்சபுரி மாகாணத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்து, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தலை வெட்டப்பட்ட கோழி ஒன்று, ஒரு வாரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கிறது. உடலை அசைக்கிறது. நடக்கிறது.

இந்தக் கோழியைப் பார்ப்பதற்கும் படம் எடுப்பதற்கும் ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். கடந்த வாரம் ‘தலை இல்லாத கோழி’ என்ற தலைப்பில் படங்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. பலரும் இதை நம்ப மறுத்தார்கள். ஆனால் உண்மை. “கோழியின் தலை எப்படி வெட்டப்பட்டது என்று தெரியவில்லை.

புத்த துறவிகள் கோயிலுக்கு அருகே பார்த்ததாகச் சொன்னார்கள். தலையே இல்லை என்றாலும் மரணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து, வாழ நினைக்கும் இந்தக் கோழிக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் கோழியை பத்திரமாகக் கவனித்துக்கொள்கிறேன். ஊசி மூலம் திரவ உணவை, தொண்டை வழியே செலுத்துகிறேன். கோழி தன் விருப்பம்போல் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் பாதுகாக்க தயாராக இருக்கிறேன்” என்கிறார் கால்நடை மருத்துவர் சுபகதீ அருண் தோங்.

இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 1945-ம் ஆண்டு மைக் என்ற தலை இல்லாத கோழி, 18 மாதங்கள் வரை உயிருடன் இருந்திருக்கிறது. திடீரென ஒருநாள் கோழியின் உரிமையாளர் லாயிட் ஓல்சென் யூட்டா பல்கலைக்கழகத்துக்கு கோழியைக் கொண்டுவந்தார். அவர் கோழிப் பண்ணை வைத்திருக்கிறார்.

தினமும் கோழிகளை வெட்டுவார். அன்றும் சுமார் 50 கோழிகளை வெட்டினார். அதில் இந்த ஒரு கோழி மட்டும் தலை வெட்டிய பிறகும் உயிருடன் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். நடந்துகொண்டிருந்த கோழியை ஒரு பெட்டியில் வைத்துவிட்டு, சிறிது நேரத்தில் இறந்துவிடும் என்று நினைத்தார்.

ஆனால் கோழி அப்போதும் உயிருடன் இருந்தது. வாழத் துடிக்கும் ஒரு கோழியின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு, ஊசி மூலம், தொண்டைப் பகுதியை தினமும் சுத்தம் செய்து, திரவ உணவை செலுத்தி வருவதாகக் கூறினார். கால்நடை ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

கோழியை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். கோழியின் தலை தனித்துவமானது. குறிப்பிட்ட கோணத்தில் தலையை வெட்டும்போது முகம், முன்னந்தலை பாதிக்கப்பட்டாலும் பின்னந்தலையில் மூளை இருக்கும் பகுதி பாதிப்புக்குள்ளாகவில்லை. அதனால் கோழி சுவாசிக்க, நடக்க, சாப்பிட முடிகிறது என்று அறிவித்தார்கள். தலை இல்லாமல் கோழி உயிருடன் இருப்பது உண்மைதான் என்ற சான்றிதழையும் வழங்கினார்கள்.

அதன் பிறகு லாயிட் ஓல்சன் தலை இல்லாத மைக்குடன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். புகழ் பெற்றார். திடீரென்று ஒருநாள் கோழியின் தொண்டையை சுத்தம் செய்ய முடியாமல் போனது. இதனால் தொண்டைப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு ‘மிராக்கிள் மைக்’ இறந்துபோனது.

Post a Comment

Recent News

Recent Posts Widget