
இந்த முறை உலகக் கோப்பை தொடரை நடத்துவது ரஷ்யா. ஏகப்பட்ட சர்ச்சைகள், சிக்கல்களுக்கு இடையில் போட்டியை நடத்தும் உரிமையை ரஷ்யா தட்டிச் சென்றுள்ளது. உலகக் கோப்பையை, அதுவும் வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்தாட்டப் போட்டியை நடத்த எந்த நாட்டுக்கும் அவ்வளவு எளிதாக உரிமை கிடைத்து விடாது.
போட்டி நடத்தும் நாட்டின் பொருளாதார நிலை, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், பெரியது முதல் சிறியது வரை உள்ள நாடுகளின் வீரர்கள் தங்குவதற்கு வசதிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் உட்பட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்துதான் போட்டி நடத்தும் பொறுப்பை ஃபிபா நிர்வாகம் வழங்கும். இவை எல்லாவற்றையும் பூர்த்தி செய்த பெருமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையே சேரும்.
மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது ரஷ்யா. இத்தனைக்கும் மைதானங்கள் இல்லாத நிலையில், புதிதாக 9 மைதானங்களைக் கட்டியிருக்கிறது. அதற்காக மட்டும் புடின் அரசு 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது.
தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், வோல்கோகிராட், சோச்சி என்று பிரபலமான நகரங்கள் உட்பட மொத்தம் 11 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. அவற்றில் மாஸ்கோவைப் போலவே வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம்தான் வோல்கோகிராட்.
எழுத்தாளர் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய ‘வோல்கா முதல் கங்கை வரை’ என்ற நூலைப் பற்றி அறிந்தவர்களுக்கு வோல்கோகிராட் நன்கு அறிமுகமாகி இருக்கும்.
இப்போதைய தலைமுறைக்கு சொல்ல வேண்டுமானால் நடிகர் சூர்யா நடித்த மாற்றான் படத்தில் வரும், ‘கால் முளைத்த பூவே, என்னோடு பாலே ஆட வா வா.. வோல்கோ நதி போல நில்லாமல் காதல் பாட வா..’ என்ற பாடலை சொல்லலாம்.
வோல்கோ நதியின் பெயரால்தான் அந்த நகரமே வோல்கோகிராட் என்றழைக்கப்படுகிறது. (1961-ம் ஆண்டு வரை ஸ்டாலின்கிராட் என்றுதான் இந்நகரம் அழைக்கப்பட்டது. ஸ்டாலின் இறந்த பிறகு நகரத்தின் பெயரை மாற்றிவிட்டார்கள்.) இங்கு ஃபிபா போட்டிக்காக வோல்கோ நதிக்கு அருகில், மிக அழகாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட மைதானம்தான் ‘வோல்கோ எரீனா’. மொத்தம் 45 ஆயிரத்து 500 பேர் மைதானத்தில் அமர வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள நாடுகளில் ஃபிபா தரவரிசை பட்டியலில் ரஷ்யா (65-வது) கடைசி இடத்தில்தான் உள்ளது.
ஆனால் தொடரை நடத்தும் நாடு என்ற வகையில் ரஷ்யா தகுதி சுற்றில் விளையாடாமல் நேரடியாக பங்கேற்கிறது. உலகக் கோப்பை ஜுரம் ரஷ்யாவை தொற்றிக் கொண்டுள்ள நிலையில் வோல்கோ எரீனா மைதானத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியை ரசிக்க ஆன்லைனில் இலவச டிக்கெட்டுகள் வழங்கினர். அதை அறிந்து வோல்கோகிராட் பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் பலரும் இலவச டிக்கெட்டில் ரஷ்ய வீரர்களின் கால்பந்தாட்டப் போட்டியை கண்டுகளித்துள்ளனர்.
இந்த மைதானத்தைப் பார்க்கவே ரம்மியமாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். மைதானம் மட்டுமன்றி கால்பந்து போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், ரசிகர்கள், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் வோல்கோ நகரை அலங்கரித்து வருகிறார்கள். அதேபோல் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி உட்பட எல்லா நகரங்களையும் வண்ணமயமாக்கி வருகின்றனர். வோல்கோகிராட் பாலங்களை மின்விளக்குகளால் ஜொலிக்கவிட்டுள்ளனர்.
போட்டிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் கல்வி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களின் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் நடைபெறும் நகரங்களில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் பயின்று வருகின்றனர். அவர்களின் பாடத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட உள்ளன. மேலும் பட்டமளிப்பு விழாக்களையும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மாற்றி அமைத்துள்ளன.
இதுஒருபுறம் இருக்க உலகக் கோப்பை கால்பந்து தொடர் மற்றும் பட்டமளிப்பு விழாக்களை முன்னிட்டு விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தைத் தாறுமாறாக ஏற்றிவிட்டன. வழக்கமாக சென்னை – டெல்லி – மாஸ்கோ – வோல்கோகிராட் செல்ல ரூ.45 ஆயிரம் (எகானமி வகுப்பு) செலவு ஆகும். ஆனால், தற்போது உலகக் கோப்பை தொடரால் ரூ.80 ஆயிரத்துக்கு மேல் விமான கட்டணம் உயர்ந்துவிட்டது. உலகக் கோப்பை கால்பந்து தொடரால் சுற்றுலா விசா கிடைப்பதிலும் சிரமம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.
பொருளாதார மந்த நிலையில் இருந்து சற்றே வளர்ச்சி பெற்றுவரும் ரஷ்யா, ஃபிபா உலகக் கோப்பைக்கு பிறகு மேலும் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. எது எப்படியோ... ஃபிபா உலகக் கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் போது.. சர்ச்சைகள் இருந்தாலும் அதிபர் புடினின் பெயர் அரசியல் பக்கங்களில் மட்டுமின்றி விளையாட்டின் வரலாற்று பக்கத்திலும் இடம்பெறும்.
Post a Comment