Ads (728x90)

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு கோஸ்வாமி, ஷிகர் தவண் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. ஆந்த்ரே ரஸ்ஸல் வீசிய 3-வது ஓவரில் கோஸ்வாமி ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் விரட்டினார்.

சுனில் நரேன் ஓவரில் ஷிகர் தவண் சிக்ஸர் விளாச ஹைதராபாத் அணி பவர்பிளேவில் 60 ரன்கள் சேர்த்தது. கோஸ்வாமி 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில், ரஸ்ஸலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அவர், ஷிகர் தவணுடன் இணைந்து 8.4 ஓவர்களில் 79 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். 10 ஓவர்களில் ஹைதராபாத் அணி 92 ரன்கள் சேர்த்தது. குல்தீப் யாதவ் வீசிய 11-வது ஓவரில் சிக்ஸர் விளாசிய வில்லியம்சன், சியர்லஸ் வீசிய 13-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்ட நிலையில் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர், 17 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். 2-வது விக்கெட்டுக்கு ஷிகர் தவணுடன் இணைந்து வில்லியம்சன் 48 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே, ரஸ்ஸல் வீசிய 15-வது ஓவரில் இரு பவுண்டரிகள் விரட்டினார்.

சீராக ரன்கள் சேர்த்த ஷிகர் தவண் 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் பிரஷித் கிருஷ்ணா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய யூசுப் பதான் 2 ரன்களில் சுனில் நரேன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கார்லோஸ் பிராத்வெயிட் 3 ரன்கள் எடுத்த நிலையில் ரஸ்ஸல் பந்தில் நடையை கட்டினார்.

பிரஷித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் மணீஷ் பாண்டே 22 ரன்களிலும், ஷகிப் அல்-ஹசன் 10 ரன்களிலும், ரஷித் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் வெளியேறினர். இதில் புவனேஷ்வர் குமார் ரன் அவுட் ஆகியிருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து 173 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி பேட் செய்யத் தொடங்கியது.

Post a Comment

Recent News

Recent Posts Widget