
வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்புகிறேன். அதிர்ஷ்டவசமாக நான் நினைத்த மாதிரியே அவை கிடைக்கின்றன. சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை கடவுள் என் பக்கமே இருக்கிறார். எனக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து இருக்கிறார். திருமணம் ஆனதும் நான் நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவேன் என்று நினைத்தனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை. சினிமாவை பற்றி புரிந்த குடும்பத்துக்கு மருமகளாக சென்றது எனது அதிர்ஷ்டம்.
இனிமேல் நடிக்க வேண்டாம் சினிமாவை விட்டு விலகிவிடு என்று அவர்கள் சொன்னதும் இல்லை. நடிக்க தடைபோட்டதும் இல்லை. திருமணத்துக்கு பிறகு வாய்ப்புகள் குறையும் என்பார்கள். ஆனால் எனக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் நிலைக்க முடியாது. அதனால்தான் நான் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன்.
சினிமா துறை மீது சமீபத்தில் நடந்த சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மோசமான இமேஜை ஏற்படுத்தி விட்டதாக பேசுகின்றனர். நல்லது கெட்டது எல்லா துறையிலும் இருக்கிறது. ஒரு சிலர் செய்த தவறால் ஒட்டுமொத்த சினிமா துறையையும் தவறாக பேசக்கூடாது. சினிமா நல்ல துறை. என்னை பொறுத்தவரை சாகிற வரைக்கும் சினிமாவில் இருக்க ஆசைப்படுகிறேன். ஒரு குடும்பத்தில் ஒருத்தர் குடிகாரராக இருந்தால் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் கெட்டவர்கள் என்று சொல்ல முடியுமா? சினிமா துறையும் அப்படித்தான். நிறைய நல்ல விஷயங்கள் சினிமா துறையில் இருக்கிறது. இவ்வாறு சமந்தா கூறினார்.
Post a Comment