ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி எமது உயிரைத் துறக்கவும் தயாரென ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம் பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வாக்கெடுப்புக்களுக்கு பயந்தவர்கள், மக்களின் பலம் இல்லாதவர்கள், திருட்டு வழியில் பிரதமர் பதவியையும், அரசாங்கத்தையும் கைப்பற்றியவர்கள் இன்று பாராளுமன்றிற்குள் வாக்கெடுப்பிற்கு பயந்துள்ளார்கள்.
அதனால் தான் பாராளுமன்றிற்குள் வாக்கெடுப்புக்கு விடும்போது காட்டுவாசிகளையும் விட மோசமாக செயற்படுகிறார்கள். அடிக்க வருகிறார்கள், வெட்ட துடிக்கிறார்கள், சபாநாயகரின் ஒலிவாங்கியை உடைக்கிறார்கள், அரச சொத்தை வீணடிக்கிறார்கள்.
ஆனால் நாங்கள் அவர்களுக்கு சொல்வது என்னவென்றால் பாராளுமன்றில் அமைச்சு பதவி மற்றும் மக்கள் பலம் இல்லாதவர்களுக்கு விஷேடமாக சொல்லிக்கொள்வது என்னவென்றால் நாங்கள் தோட்டாக்களுக்கு பயமில்லை. நாங்கள் கட்டுத்துப்பாக்கிகளுக்கு பயமில்லை. வாள் , கத்திகளுக்கு பயமில்லை. தற்கொலை செய்துகொள்ளும் குண்டுதாரிகளுக்கும் பயமில்லை. நாங்கள் உறுதியாக ஜனநாயகத்தின் மூலம் வெற்றி பெறுவோம் எனக் கூறிக்கொள்கிறேன்.
நாங்கள் நேற்று முன்தினமும் வெற்றி பெற்றோம். நேற்றும் வெற்றி பெற்றோம். இன்றும் வெற்றி பெற்றோம்.
பெரும்பான்மையில்லாத சிறுபான்மையினருக்கு தில்லிருந்தால் நாளை பாராளுமன்றில் மூன்றாவது முறையாகவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு கூறிக்கொள்கிறேன்.
நாங்கள் தேர்தலுக்கு பயந்தவர்கள் இல்லை தேர்தலுக்கு தயார் ஜனாதிபதிக்கு தில்லிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்ட சொல்லுங்கள் இந்த சவாலை பகிரங்கமாக தெரிவிக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment