
தனக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தை எதிர்கொள்ளும் வகையில் தன்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். வடமாகாண முதலமைச்சராக பதவிக்காலம் முடிந்ததன் பின்னர் தன்னுடைய பிரத்தியேக பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு வழங்கி வந்துள்ளதாக அந்த கடிதத்தில் நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இன்று காலை யாழ்.பொலிஸ் தலைமை மேற்பார்வையாளர் தன்னுடைய பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்களை உடனே யாழ்.பொலிஸ் நிலையத்தில் வந்து கையெழுத்திடுமாறு கோரியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில காலங்களுக்கு முன்னர் அம்பலாங்கொடையைச் சேர்ந்த டி சில்வா என்பவரின் தகவலுக்கு அமைய தனது உயிருக்கு ஆபத்து என்பது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கும், சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபருக்கும் தெரிவித்திருந்ததாக சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது தனிப்பட்ட ரீதியில் இது பற்றித் தெரிவித்திருந்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதில் சந்தேகத்திற்கு உரியவராகக் கணிக்கப்பட்டவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் உப பொலிஸ் அதிபர் நாலக சில்வா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன் மீதான உயிராபத்து சம்பந்தமாக பொலிஸ்மா அதிபரும், சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபரும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவர்களுக்கு இது பற்றி எழுத்தில் தெரிவிக்குமாறு கோரியிருந்ததாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபருக்கு அறிகையிடப்பட்ட தனது உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து தன்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு தற்போதும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்த கடிதத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் வடமாகாண சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment