Ads (728x90)

யாழ். மாநகர சபையின் அமர்வு நேற்று  வெள்ளிக்கிழமை (07-12-2018) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார்.

மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான வரவு செலவுத்திட்டமாக காணப்படுவதால் குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர்.

எனினும், குறித்த வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாக தாம் கருதவில்லை எனத் தெரிவித்த யாழ். மாநகர சபையின் முதல்வர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறும் சபை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

மாநகர சபையின் அமர்வு மதியநேர உணவு வேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பமான போது வரவு செலவுத்திட்டத்துக்கான செலவீன சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பானது.

இதன்போது வருமானத்தில் 350 மில்லியன் ரூபா குறைகின்ற காரணத்தால் செலவைக் குறைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் சார்ந்த செலவுகள் காணப்படாதததுடன் முற்றுமுழுதாக ஆடம்பரச் செலவுகளுக்கும், வெளிநாட்டுச் செலவுகளுக்கும், கடன்களுக்கும் இந்த பட்ஜெட்டில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எனவே, செலவுகளை சீர்திருத்தி தகுந்த செலவீனமுள்ள வரவு செலவுத்திட்டத்தை சபையில் சமர்ப்பிக்குமாறு மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதேபோன்று வருமானத்திற்குத் தகுந்தவாறு செலவு சீர்திருத்தங்களை மேற்கொண்டு பட்ஜெட்டை புதுப்பித்துச் சபையில் சமர்ப்பிக்குமாறு வேறொரு கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் வலியுறுத்தினர்.

சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரனுக்கும் யாழ். மாநகர சபை முதல்வருக்குமிடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து யாழ். மாநகர சபையின் முதல்வர் வரவு செலவுத்திட்டத்தை வாக்கெடுப்புக்கு விடாமல் சபையை ஒத்தி வைத்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget