நாட்டின் விவசாய சமூகத்திற்காக அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மற்றுமொரு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கம் நேற்று ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
நாட்டின் விவசாய சமூகத்தின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதியின் முழுமையான வழிகாட்டலின் கீழ் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளுடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்ட நீர்ப்பாசன செயல்திட்டங்களில் இரண்டாவது கட்டமாக வடக்கின் பாரிய நீர்த்தேக்கமான கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தின் புனர்நிர்மாணப் பணிகள் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நீர்த்தேக்கத்தில் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. புனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த இரணைமடு நீர்த்தேக்கத்தின் மூலம் 9,180 குடும்பங்கள் பயன்பெறுவதுடன், 21,000 ஏக்கர் விவசாய நிலத்தில் இரண்டு போகங்களின் போதும் எவ்வித பிரச்சினையுமின்றி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. 2,000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புனர்நிர்மாணப் பணிகளுக்கு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதி ஏற்பாடுகளை வழங்கியுள்ளன. உலக வங்கியின் நிதி உதவியுடன் குளத்தின் அணைக்கட்டுக்கள் உயர்த்தப்பட்ட பின்னர் தற்போதே நீண்ட இடைவெளியின் பின்னர் 36 அடி உயரத்திற்கு நீர் சேர்ந்துள்ளது.
இந்நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு இதற்கு முன்னர் 131 மில்லியன் கனமீற்றர்களாக இருந்ததுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்டதன் பின்னர் இதன் நீர் கொள்ளளவு 148 மில்லியன் கனமீற்றர்களாக அதிகரித்துள்ளது. இந்நீர்த்தேக்கத்தின் மேலதிக நீரை எதிர்காலத்தில் யாழ்ப்பாண மக்களின் தேவைக்காகவும் கொண்டு செல்வது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment