Ads (728x90)

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை–நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ ஆகியோர் களம் இறங்கினார்கள். காலின் முன்ரோ 13 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து கேப்டன் கனே வில்லியம்சன், மார்ட்டின் கப்திலுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். சிறப்பாக ஆடிய கனே வில்லியம்சன் 74 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 76 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 2–வது விக்கெட்டுக்கு மார்ட்டின் கப்தில்–வில்லியம்சன் இணை 163 ரன்கள் சேர்த்தது.

அபாரமாக ஆடிய மார்ட்டின் கப்தில் 138 ரன்னில் (139 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன்) ஆட்டம் இழந்து வெளியேறினார். அவர் அடித்த 14–வது சதம் இதுவாகும். அத்துடன் அவர் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் பிரன்டன் மெக்கல்லத்தை பின்னுக்கு தள்ளி 4–வது இடத்துக்கு முன்னேறினார். அடுத்து களம் கண்ட ராஸ் டெய்லர் 37 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது. இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். காயம் காரணமாக ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஜேம்ஸ் நீ‌ஷம் 13 பந்துகளில் 6 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஓவர் முடிந்ததால் அவரது அதிவேக அரைசதம் அடிக்கும் வாய்ப்பு மயிரிழையில் கைநழுவி போனது. தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 16 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக உள்ளது. இலங்கை அணி தரப்பில் மலிங்கா, நுவான் பிரதீப், திசரா பெரேரா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஜோடியான குணதிலகா (43 ரன்கள், 62 பந்து, 3 பவுண்டரி), டிக்வெல்லா (76 ரன்கள், 50 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர். அடுத்து இறங்கிய குசல் பெரேரா 86 பந்துகளில் 13 பவுண்ட்ரி, ஒரு சிக்சருடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருடன் இணைந்த யாரும் நிலைத்து நிற்கவில்லை.

இலங்கை அணி 49 ஓவர்களில் 326 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் நீ‌ஷம் 3 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், பெர்குசன், சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget