
உயர் கல்வித்துறையில் இந்த நான்கு வருட காலத்திற்குள் பொன்னான ஒரு யுகத்தை உருவாக்கி அதன் வளர்ச்சிக்காக மட்டும் 60 பில்லியன் அதாவது 60,000 மில்லியனை இந்த அரசு செலவிட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் திறப்புவிழா நேற்று (17.01) பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையில் குருவிட்ட ஏதன்டவல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்:
இது கல்வித்துறையில் இந்நாடு அடைந்து வருகின்ற வெற்றிக்குச் சான்றாகும். இது மாற்றத்திற்குரிய யுகம் என நான் குறிப்பிட்டது இதனால் தான். இவ்வாறே பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேவையான வளங்களையும், விரிவுரையாளர்களையும் எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. அதேபோல 16 கற்கை நெறிகளுக்கான புதிய பீடங்களை 4 வருடங்களுக்குள் எம்மால் நிறுவ முடிந்தது.
பல்கலைக்கழக பட்டம் பற்றிய தகமை சான்றுகளில் காணப்படும் சீர்கேடுகளைக் களைய புதிய ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கான அமைச்சுப்பத்திரத்தை இம்மாதம் சமர்ப்பிக்கவுள்ளேன். அதன் மூலம் சர்வதேச தரத்திற்கு எமது தகைமைகளையும் தரமுயர்த்த முடியும். பட்டதாரிகளுக்கும், தொழில் சந்தைக்குமிடையிலே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களையவும் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளோம். இதன் மூலம் எமது உயர் கல்வித்துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீதி அமைச்சர் தலதா அத்துகோரல,சப்ரகமுவ பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கம்புறுக்கமுவே வஜிர, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், இராஜாங்க அமைச்சர் கருனாரத்ன பரணவிதாரன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஏ.விஜயதுங்க, சேஷா விதானகே, பேராசிரியர் சுனில் சாந்த, அமைச்சின் செயலாளர் எம்.எம்.ஜி.மாயாதுன்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment