மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டியே தீர வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிடிவாதம் பிடிப்பதால், நிதி பற்றாக்குறையால் 4வது வாரமாக அரசு அலுவலகங்கள் முடங்கியுள்ளன.அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து ஏராளமானோர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதுடன், அவர்களால் போதை மருந்து கடத்தல் அதிகரிக்கிறது என்பது, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முக்கிய குற்றச்சாட்டு. இதை தவிர்ப்பதற்காக, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சுமார் 2000 மைல் நீளத்துக்கு, தடுப்புச்சுவர் அமைக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். அதற்காக 5.7 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, அதிபர் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. மக்களின் வரிப்பணத்தை வீணாக்க அனுமதிக்க முடியாது என, தங்களது கொள்கையில் உறுதியாக உள்ளது எதிர்க்கட்சி. இதன் விளைவாக, இந்தாண்டு அரசு அலுவலகங்களுக்கு நிதி ஒதுக்கும் மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. ஊதியம் கிடைக்காததால், வீதியில் இறங்கிய அரசு ஊழியர்கள், அதிபருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, நீதித்துறை, போக்குவரத்து ஆகிய துறைகள் நிதிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களின் முடக்கம் 4வது வாரமாக தொடர்வதால், பல்வேறு முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க பொருளாதாரமும் பாதிக்கப்படும் என கருத்து எழுந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் அரசு அலுவலகங்கள் இவ்வளவு நாட்கள் முடங்கவில்லை என்கிறது புள்ளி விவரம். கடந்த 1995-96ம் ஆண்டுகளில் பில்கிளின்டன் அதிபராக இருந்த போது, அதிகபட்சமாக 21 நாட்கள் அரசுத்துறைகள் முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்ப ட்ரம்ப் கையாண்டிருக்கும் ஆயுதம் அவசர நிலை பிரகடனம். ஆனால் உடனடியாக அந்த ஆயுதத்தை கையில் எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள ட்ரம்ப், தமது கோரிக்கையை எதிர்க்கட்சி ஏற்காவிட்டால், அவரச நிலை நிச்சயம் பிரகடனப்படுத்தப்படும் என எச்சரித்திருக்கிறார். அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஜனநாயகக் கட்சி பணியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Post a Comment