வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல லட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க பாதிக்கப்பட்டவர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்தனர்.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.
அந்த நிறுவனத்தில் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு பணம் செலுத்தி முற்பதிவு செய்துள்ளனர். எனினும் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டது போலி விமான பயணச் சீட்டு என அவர்கள் பின்னரே அறிந்துள்ளனர். சிலர் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்குச் சென்று போலி விமானச் சீட்டு எனத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு வழங்க இன்றைய தினம் சென்றனர். அவர்களுடன் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பங்காளர் எனத் தெரிவித்த ஒருவரும் தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்தார்.
பாதிக்கப்பட்டவர்களால் பயண முகவர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பணியாளரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அத்துடன் அந்த நிறுவனத்தின் உதவி முகாமையாளர் எனத் தெரிவித்த ஒருவரும் வருகை தந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பாதிக்கப்பட்டவர்களை நாளை மு.ப. 10 மணிக்கு முறைப்பாடு வழங்க வருமாறு திருப்பி அனுப்பியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment