இலங்கையின் இராவணா-1 என்ற 1வது செயற்கைகோள் விண்ணிற்கு ஏவப்பட்டது. இதனை இலங்கையின் பொறியியல் மாணவர்களான தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சாமிகா விதானகே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இலங்கையின் பொறியியல் மாணவர்கள் இருவரினால் தயாரிக்கப்பட்ட இச்செயற்கைக் கோள் நேற்று அதிகாலை 2.16 மணியளவில் விண்ணிற்கு ஏவப்பட்டது. இது இன்று மாலை 6.30 மணியளவில் விண்வௌியை அடையவுள்ளது.
அமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம், புவியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஏவப்பட்டது.
ஜப்பானின் கியூஷு பல்கலைக்ககத்தின் பர்டிஸ் என்ற விசேட திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமுடைய இராவணா-1 செய்மதியானது, 1.1 கிலோ கிராம் நிறை கொண்டதாகும்.
ஆதர் சீ. கிளாக் மையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய, இதுபோன்றதொரு செய்மதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கு இராவணா-1 என்றும் பெயரிடப்பட்டது. இவர்கள் இருவரும் ஜப்பானின் கியூஷு தொழிநுட்ப நிறுவனத்தில், பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வருகின்றனர்.
இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் செய்மதியானது, சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர், எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதமளவில் அது விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இச்செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், நாளொன்றுக்கு 15 தடவைகள் பூமியை சுற்றி வலம்வரவுள்ளது. இதன் வேகம் வினாடிக்கு 7.6 கிலோமீற்றராகும். குறித்த செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையையும், அதனைச் சூழவுள்ள வலையத்தையும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment