நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தின் சார்பில் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பெயர்பலகை நாட்டலுக்கு சென்றவர்களிற்கு இடையூறு விளைவிக்கப்பட்டதை சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற உத்தரவை மீறி அங்கு தூண் அமைக்கப்பட்டு சிசிரிவி கமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் பெயரை கணதேவி தேவாலயமென மாற்றம் செய்யப்பட்டுள்ளதை, மாற்றி நீராவியடி பிள்ளையார் ஆலயமென மாற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு நேற்று பொலிசாரால் தடையேற்படுத்தப்பட்டது. இதனால் இந்த இரண்டு விடயங்களிலும் நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டுமென சமர்ப்பணம் செய்தார்.
இதையடுத்து, சிசிரிவி கமரா பொருத்த யார் அனுமதித்தது என்று முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நீதிமன்றம் வினவியதோடு, உடனடியாக அதனை அகற்றும்படி உத்தரவிட்டது. இன்று அதை அகற்றுவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் கணதேவி தேவாலயம் என்ற பெயரையும் மாற்றி, நீராவியடி பிள்ளையார் ஆலயமென மாற்றும்படி நீதவான் உத்தரவிட்டார்.

Post a Comment