போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற ஆரம்பித்தனர்.
எனினும் ஆப்கானிஸ்தான் அணியின் நடுத்தர வரிசை ஆட்டக்காரர்கள் அந்த அணியை ஓரளவு நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்தனர். ரமத் ஷா 43 ஓட்டத்தையும், குல்படின் நைப் 31 ஓட்டத்தையும், நஜிபுல்லா ஜட்ரன் 51 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 34.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை பெற்றது.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் அடம் ஷாம்பா தலா 3 விக்கெட்டுக்களையும், மார்கஸ் ஸ்டோனெனிஸ் 2 விக்கெட்டுக்களையும், மிட்ச்செல் ஸ்டாக் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
208 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான டேவிட் வோர்னர் மற்றும் பிஞ்ச் நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
இதனால் அவுஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 55 ஓட்டத்தையும், 15 ஓவரில் 87 ஓட்டத்தையும் பெற்றது.
இதனிடையே அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் 13.1 ஆவது ஓவரில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். எனினும் அவர் 16.2 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய உஷ்மன் கவாஜாவுடன் கைகோர்த்த டேவிட் வோர்னர் 22.2 ஆவது ஓவரில் அரைசதம் கடந்தார்.
வெற்றிக்கு மூன்று ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருக்க ஸ்மித்தின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய மெக்ஸ்வெல் தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே நான்கு ஓட்டத்தை பெற அவுஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த இலக்கை கடந்தது.
ஆடுகளத்தில் டேவிட் வோர்னர் 89 ஒட்டத்துடனும், மெக்ஸ்வெல் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் வோர்னர் தெரிவானார்.

Post a Comment