இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கிணங்க நாம் விரைவில் புதுடில்லி செல்லவுள்ளோம். அங்கு அரசியல் தீர்வு தொடர்பில் விரிவாகப் பேசுவோம். இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை நாம் வென்றெடுப்போம். சர்வதேச சமூகமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும். இந்த நம்பிக்கை எமக்குண்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கையில் இனப்பிரச்சினை இனியும் தொடர இந்தியா விரும்பாது. ஒருபோதும் அனுமதிக்காது. இங்கு தமிழர்கள் சம அந்தஸ்தில் வாழ வேண்டும் எனவும், பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் எமக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் எனவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் நாம் எடுத்துரைத்தோம்.
அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கை அரசுக்கு இந்திய மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை நாம் வென்றெடுப்போம். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சுவிஸ், ஆஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும்.
இந்த நம்பிக்கை எமக்குண்டு. இனியும் இலங்கை அரசு இந்திய உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment